எங்கிருந்து வந்தாய் நீ ? – Poem on Corona Virus

எங்கிருந்து வந்தாய் நீ ?

(எழுதியவர்: P.S. சங்கரன்)

எங்கிருந்தோ நீயும் வந்தாய்
இறைவனே நான்தான் என்றாய்

காற்றிலும் மிதந்து வந்தாய்

மூச்சிலும் கலந்து நின்றாய்

உருவமே எதுவும் இல்லாதிருந்தும்

உலகத்தை உன்னிடம் பணியச்செய்தாய்

 

எட்டு திக்கில் உள்ள மக்களெல்லாம் நடு

நடுங்கினர் உன் பெயரைக் கேட்டு

ஒரு லட்சம் மக்கள் மடிந்து வீழ்ந்தபோதும்

உன் அசுர தாகம் சிறிதும் அடங்கவில்லை

அரசியல்வாதியையும் அரசாங்க அதிகாரியையும்

அஞ்சி நடுநடுங்கிப் பின்னடைய வைத்தாய்

பள்ளிகள் கல்லூரிகளை மூடவைத்துப் பின்

பாலகரின் எதிர்காலத்தைப் பகடையாடினாய்

மழலையரற்றும் சில குழந்தைகள் கூட உன்

பாசக்கயிற்றுக்குப் பலியாகினர் அந்தோ!

 

மனிதகுலம் உனக்கென்ன கேடு செய்ததப்பா

இம்மாபெரும் கோபத்தைக் கொடுப்பதற்கு?

ஆ! புன்சிரிப்புத் தவழ்கிறதே உன் முகத்தில் கூட!

“நீயே கேள் உன் மனச்சாட்சியை” என்கிறாயா?

கேட்கிறோம் அப்பா, கேட்கிறோம் …………..

 

விஞ்ஞானம் எதையுமே சாதிக்கமுடியுமென்று

இயற்கைக்கு எதிராகச் செயற்பட்டோம்

ஆப்பிள்களும் மைக்ரோ சாப்ட்டுகளும் மற்றும்

மடிநோக்கிக் குடியேறிய கணினிகளும்

இவை போதும் எங்களைக் காப்பதற்கு என்று

இறுமாப்பு அதிகம் கொண்டிருந்தோம்

“இது மட்டும்தானா?” என்று நீ கேட்கிறாயா?

இல்லையப்பா, இல்லை! இன்னுமுண்டு

 

கோடி மரங்களை வேருடன் வெட்டிச் சாய்த்தோம்

அமேசான் காடுகளை அழித்தொழித்தோம்

ஆறுகள் குளங்களெல்லாம் மண்மேடாக்கி ஆங்கே

வானளாவக் கட்டிடங்கள் நிறுவி விட்டோம்

கங்கையின் காவிரியின் வண்டல் மண்ணை

சுரண்டிச் சுரண்டி லாபம் ஈட்டினோம்

நாளுக்கு இருபதாயிரம்  ஜெட்விமானங்கள்

உலகெங்கும் செருக்குடன் உலவ விட்டோம்

குடும்பத்துக்கு ஒரு கார் வேண்டுமே என்று

நாடெங்கும் உற்பத்தி அதிகரித்தோம்

வேகத்தைக் குறையுங்கள் என்றவரெல்லாம்

வேகத்தின் சுழலில் மடிந்து மறைந்தனர்

இயற்கையும் சீரழிந்து ஓலமிட்டாள் !! அந்த

இயற்கை அன்னைதான் உன்னைப் பெற்றாளோ?

அவள் உனக்கு ஆசையுடன் சூட்டியதுதான்

கொரோனா என்னும் அழகான பெயரோ?

 

போதும் அப்பா நாங்கள் செய்த காரியங்கள்

கற்பித்து விட்டாய் நீ சரியான பாடம்

விட்டுவிடு எங்களை விட்டு விடப்பா

ஓடிவிடு, ஓடிவிடு, ஓடியே மறைந்துவிடு!

சிறிதேனும் எங்களுக்கு அறிவிருந்தாற்கூட

சிந்தித்தே இனிமேல் செயற்படுவோம்

இனிமேலும் உன்போன்ற வைரசு எதிரிகளை

எதிர்த்தாளும் சக்தி எங்களுக்கில்லை !!

P.S. Sankaran

Santhosham 37 – Covai S3 Retirement Community 

Leave a Reply